அதிக சிக்சர்களை எதிர்பார்க்கலாமா? டோனியை கலாய்த்த யுவி

அணித்தலைவராக  இல்லாத நிலையில் உங்களிடமிருந்து நிறைய சிக்சர்களை எதிர்பார்க்கலாமா? என  டோனியை கலாய்த்துள்ளார் யுவராஜ்சிங்.

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக தனது தலைமைப் பொறுப்புகளை மகேந்திர சிங் டோனி துறந்து விட்டார். அடுத்து வரக்கூடிய போட்டிகளில் விராட் கோலியின் தலைமையில் டோனி ஆடவிருக்கிறார்.

இந்நிலையில் நீண்ட நாள் கழித்து இந்திய அணிக்குத் திரும்பியிருக்கும் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், டோனியைப் பேட்டி எடுத்து தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது நண்பனும், முன்னாள் தலைவருமான டோனியைப் பார்த்து இந்திய அணியின் தலைவராக நீங்கள் கடந்து வந்த பாதை குறித்து? என யுவராஜ் கேட்க அதற்கு டோனி “தலைமைப் பொறுப்பு எளிதானது அல்ல என்றாலும், இந்த பயணம் மிகவும் சிறப்பானதாக இருந்தது” என்றார்.

எப்போதுமே நீங்கள் ஒரு சிறந்த தலைவர். உங்களது தலைமையில் விளையாடிய அனுபவம் அற்புதமானது. மூன்று சாம்பியன்ஷிப்களை வென்றது, உலகக் கோப்பையை வென்றது, டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது” என்று யுவராஜ், டோனியைப் புகழ, இடைமறித்த டோனி “சிறந்த இருக்கையில் அமர்ந்து உங்களின் ஆறு சிக்ஸ்களை நான் பார்த்தேன்” என்கிறார்.

கடைசியாக யுவராஜ், ‘நீங்கள் தற்போது தலைவராக இல்லை உங்களிடமிருந்து நாங்கள் நிறைய சிக்சர்களை எதிர்பார்க்கலாமா?’ என்று கேட்கிறார். அதற்கு டோனி “சரியான தருணத்தில் சூழ்நிலை சாதகமாக அமைந்தால் நான் நிறைய சிக்சர்களை பறக்க விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.