அக்ரமிற்கு பிடியாணை

வீதி  விபத்து வழக்கொன்றில் ஆஜராகாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்  வாசிம் அக்ரமுக்கு கரைச்சி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் வாசிம் அக்ரம் சென்ற கார் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அமினுர் ரகுமான் மீது மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த குறித்த இராணுவ அதிகாரி வாசிம் அக்ரம் மீது துப்பாக்கியால் சுட்டார். ஆனால் நல்லவேளையாக அவர் மீது படவில்லை. காரில்தான் குண்டு பாய்ந்தது.

சில நாட்கள் கழித்து இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். ஆனால் பகதூர்பாத் பொலிஸ் நிலையம் இது குறித்து தானாக முன்வந்து வழக்குபதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை கராச்சி நீதிமன்றில் நடந்த போது வாசிம் அக்ரம் 31முறை நீதிமன்றில் ஆஜராக வில்லை. இதை தொடர்ந்து வாசிம் அக்ரமுக்கு பிணையில் வெளியே வரக்கூடிய பிடியாணை பிறப்பித்து நீதி மன்றம் உத்தரவிட்டதுடன் அடுத்த கட்ட வழக்கு விசாரணை 17-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அக்ரம் ஆஜராவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

வாசிம் அக்ரம் தற்போது குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் உள்ளார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடரை பார்ப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.