லக்மால் முன்னடைவு மத்தியூஸ் பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் சபையினால், டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் (3ஆவது டெஸ்ட்), தென்னாபிரிக்கா எதிர் இலங்கை (2ஆவது டெஸ்ட்) ஆகிய போட்டிகளின் முடிவிலேயே, இத்தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில், முதல் 6 இடங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஸ்டீவன் ஸ்மித், விராத் கோலி, ஜோ றூட், கேன் வில்லியம்ஸன், டேவிட் வோணர், அஸார் அலி ஆகியோரே, முதல் 6 இடங்களில் காணப்படுகின்றனர். 14ஆவது இடத்தில் காணப்பட்ட யுனிஸ் கான், 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தொடர்ந்து குயின்டன் டீ கொக் (9இலிருந்து 8க்கு), ஏபி டி வில்லியர்ஸ் (8இலிருந்து 9க்கு), ஹஷிம் அம்லா (7இலிருந்து 10க்கு) ஆகியோர் காணப்படுகின்றனர்.

3ஆவது போட்டிக்கு முன்னர் 11ஆவது இடத்தில் காணப்பட்ட இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 3ஆவது போட்டியில் போதிய திறமைகளை வெளிப்படுத்தாதன் காரணமாக, 14ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். 23ஆவது இடத்தில் காணப்பட்ட சந்திமால் 26ஆவது இடத்துக்கும், 31ஆவது இடத்தில் காணப்பட்ட தனஞ்சய டி சில்வா 33ஆவது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டுள்ளனர். பந்துவீச்சாளர்களில் முதலிரு இடங்களிலும் இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா இருவரும் காணப்படுகின்றனர். 5ஆவது இடத்தில் காணப்பட்ட ஜொஷ் ஹேஸல்வூட், பாகிஸ்தானுக்கெதிராகச் சிறப்பாகச் செயற்பட்டு, 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரங்கன ஹேரத்துக்குச் சுழற்சியை வழங்கக்கூடாது என, தென்னாபிரிக்க ஆடுகளங்களை, வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்களாக அந்நாட்டு ஆடுகள மேற்பார்வையாளர்கள் மாற்றியிருந்த நிலையில், விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தவறிய ஹேரத், 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து வரும் இடங்களில் டேல் ஸ்டெய்ன் (4இலிருந்து 5க்கு), ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவேர்ட் ப்ரோட், கஜிஸ்கோ றபடா (17இலிருந்து 8க்கு), வேர்ணன் பிலாந்தர், மிற்சல் ஸ்டார்க் (8இலிருந்து 10க்கு) ஆகியோர் காணப்படுகின்றனர்.

suranga-lakmal

 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியிருந்த இலங்கையின் சுரங்க லக்மால், லஹிரு குமார இருவரும், தங்கள் வாழ்நாளின் சிறந்த அடைவைப் பெற்றுள்ளனர். இப்போட்டிக்கு முன்பாக 36ஆவது இடத்தில் காணப்பட்ட லக்மால், 30ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய குமார, முதலிரு போட்டிகளின் பின்னர் முதல் 100 பேரில் ஒருவராக இடம்பெற்றிருக்காத நிலையில், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை காரணமாக, 67ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்