டெஸ்ட் வீரர்கள் தரவரிசை யுனிஸ்,ரபாடா முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் யூனிஸ்கான், ரபடா முன்னேற்றம் அடை ந்துள்ளனர்

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி துடுப்பாட்டவீரா்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸிமித் (933 புள்ளி), இந்திய அணித்தலைவர் விராட் கோலி (875 புள்ளி), இங்கிலாந்தின் ஜோ ரூட் (848 புள்ளி), நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் (817 புள்ளி), அவுஸ்ரேலிய துணை அணித்தலைவர் டேவிட் வோர்னர் (812 புள்ளி) ஆகியோர் தொடருகிறார்கள். அவுஸ்ரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்த பாகிஸ்தான் சிரேஷ்ட வீரர் யூனிஸ்கான் (175 ) 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் (887 புள்ளி), ரவீந்திர ஜடேஜா (879 புள்ளி) ஆகியோர் முதல் இரு இடங்களிலும் நீடிக்கிறார்கள். சிட்னியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 7 விக்கெட்டுகளை சாய்த்த அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை (860 புள்ளி) பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும்.

இதே போல் கேப்டவுன் டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கையை வீழ்த்தியதில் பக்கபலமாக விளங்கிய தென்ஆப்பிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா  9 இடங்கள் அதிகரித்து 8-வது இடத்தை பெற்றுள்ளார். சகல துறை வீரர்கள் தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்தும்  முதலிடத்திலேயே உள்ளார்.

டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவுஸ்ரேலியா 109 புள்ளி களுடன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 101 புள்ளி களுடன் 4-வது இடத்திலும்  பாகிஸ்தான்  97 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும்  நியூஸிலாந்து 96 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் இலங்கை 96 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் மேற்கிந்திய தீவுகள் 69 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் பங்களாதேஷ் 65 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் சிம்பாப்வே 5 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.