துருவங்கள் பதினாறு

கொலை மற்றும் விபத்து பற்றிய விசாரணையை கருவாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது துருவங்கள் பதினாறு.

ஊட்டி – உதகமண்டலப் பகுதியில், அடை மழை நள்ளிரவில் , நடு ரோட்டில் ஒரு வாலிபர் துப்பாக்கியால் தற்கொலை செய்துக்கொண்டு கிடக்கிறார். அதே நாளில் அதே ஏரியாவில. அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தோழியுடன் வசித்து வந்த இளம் பெண் ஒருவரும் மாயமாகி இருக்கிறார். அவரது அறை முழுதும் இரத்தம் தெறித்துக் கிடக்கிறது.

ஆனால் , அது அந்த இளம் பெண்ணின் இரத்தம் இல்லை… அதே நாளில் அதே பகுதியில், அதே நேரத்தில் மூன்று இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து ., வீதியைக் கடக்க முயலும் வாலிபர் ஒருவர் மீது காரை ஏற்றி விட்டு அதில் அடிபட்டு பிணமானவனை தங்களது கார் டிக்கியிலேயே தூக்கி போட்டுக் கொண்டு போய் ., வீட்டில் நிறுத்திவிட்டு வந்து பார்த்தால் பிணத்தை காணாது திகைக்கின்றனர்.

எந்த சம்மந்தமும் இல்லாத மாதிரி ரசிகர்களுக்கு வெவ்வேறு கோணங்களில் காட்டப்படும் இந்த மூன்று சம்பவங்களுக்கும் எப்படியான தொடர்பு இருக்கிறது ..? என்பதும்… அதை தன் காலை இழந்த காவல்துறை ஆய்வாளர் தீபக் எனும் ரஹ்மான் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்…? என்பதையும் ., கொலையாளி யார் ? என்பதையும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும், திரில்லராகவும் … சொல்லியிருக்கிறது ‘துருவங்கள் பதினரறு ”

காட்சிப்படுத்தலை பொறுத்தவரை சற்று நீண்ட இடைவெளிக்குப் பின் ரஹ்மான் , கதாநாயகராக காவல் ஆய்வாளராக நடிக்க., அவருடன் டெல்லி கணேஷ் உள்ளிட்ட ஒரு சில பழகிய முகங்களும் ., பிரகாஷ் , சந்தோஷ்கிருஷ்ணா , கார்த்திகேயன் , ப்ரவீன் , யாஷிகா , பாலா ஹாசன் , வினோத் வர்மா , பிரதீப், அஞ்சனா ,ஷரத்குமார் உள்ளிட்ட புதுமுகங்களும் நடிக்க ., கார்த்திக் நரேனின் எழுத்து , இயக்கம் மற்றும் தயாரிப்பில் ‘செம சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் படம்’ என்ற சொல்லுக்கு எடுத்துக் காட்டாக வந்திருக்கிறது ‘துருவங்கள் பதினாறு’.

முதல் காட்சியில் இருந்து கடைசி வரையிலும் அடுத்தது என்ன..? அடுத்து என்ன..? கொலைக்கும் , கடத்தலுக்கும் , யார் தான் காரணம்..? என்ற தேடலை ரசிகனுக்குள்ளே புகுத்தி கச்சிதமாக படத்தை நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன்.

கதாநாயகனாக, கதாநாயகராக, ஸ்டைலான சற்றே புதிரான காவல் ஆய்வாளராக கச்சிதமாக நடித்திருக்கிறார் நடிகர் ரஹ்மான்.

கதாநாயகி , கதாநாயகியர் என்று படத்தில் பெரிதாக யாருமில்லை .

பிற நட்சத்திரங்கள் பற்றி பார்க்கும்போது தன் ஒரே மகனை விபத்தில் இழந்த விஷயத்தை மனைவியிடம் எவ்வாறு சொல்வது என புலம்பிய படியே செல்லும் வயதான தகப்பனாக டெல்லி கணேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சில் நிற்கிறார்.

அவரை மாதிரியே .,அறிவுஜீவி கான்ஸ்டபிளாக ரஹ்மானுக்கு உதவும் பிரகாஷ் , பாபியன் – சந்தோஷ்கிருஷ்ணா , மெல்வின் -கார்த்திகேயன் , மனோ -ப்ரவீன் , ஸ்ருதி-யாஷிகா , பிரேம் -பாலா ஹாசன் , க்ருஷ் -வினோத் வர்மா , ஹெட் கான்ஸ்டபிள் ராஜன் -பிரதீப், வைஷ்ணவி – அஞ்சனா , நியுஸ் பேப்பர் பாய் -ஷரத்குமார் உள்ளிட்ட புதுமுகங்களும் ., பழகிய முகங்கள் மாதிரியே பக்காவாய் பளிச்சிட்டிருக்கின்றனர் பலே , பலே.

தொழில் நுட்பகலைஞர்கள் பற்றி பேச வேண்டுமானால், ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும் , டி.ஐ யும் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு.,சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு அடை மழை இருட்டிலும் ,மிளிரும் மிரட்டல் ஓவியப்பதிவு !

ஜேக்ஸ் பிஜாய்யின் மிரட்டல் பின்ணணி இசை இப்படத்திற்கு மதிப்பை மேலும் , மேலும் கூட்டுகிறது.

கார்த்திக் நரேனின் எழுத்து , இயக்கம் மற்றும் தயாரிப்பில் ., ஒரு சில லாஜிக் குறைகள் , மீறல்கள் ஆங்காங்கே படத்தில் தென்பட்டாலும் ., ஒரு மாதிரி , சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் டைப் படங்கள் என்று சொல்லிக் கொண்டு இது எதுவுமே இல்லாமல் பல திரைப்படங்கள் வெளிவந்து நம்மைசோதனைக்குள்ளாக்கிய நிலைமையில் இப்போது வந்திருக்கும் உண்மையான திரில்லிங் மூவி யாக ஜொளிக்கிறது “துருவங்கள் பதினாறு ” திரைப்படம் … என்பது பெறும் ஆறுதல்!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *