இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் என்பது ருஷ்ய நாட்டில் ஜார் மன்னள் நடத்திய கொடுங்கோல் ஆட்சி கண்டு கொதித்தெழுந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுப்பிய அனல் கக்கும் கவிதை வரிகள்.
மனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து குமுறி இடித்த கொடியவர்களின் காட்டாட்சி பாரதியை மட்டுமல்ல ருஷ்யத் தொழிலாளி வர்க்க்த்தையே திரண்டெழ வைத்து மாபெரும் புரட்சியை வெடிக்க வைத்து ஜார் மன்னனையே அரியணையிலிருந்து தூக்கியெறியும் நிலையை உருவாக்கியதுடன் ஒரு புதிய சுதந்திர ஆட்சியையும் தோற்றுவித்தது.
இலங்கையிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் மீது இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற வகையிலான ஒரு காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டதை அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.
கடந்த மாவீரர் தினத்தன்று பொலிஸாரும் இராணுவத்தினரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து சோதனை என்ற பேரில் வன்முறைகளில் ஈடுபட்டனர். அடுத்தநாள் அதைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரால் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டது. அதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
அந்தச் சம்பவத்தை அடுத்து சில மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் புனர்வாழ்வு என்ற பேரில் வெலிகந்தை இராணுவத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களை விடுதலை செய்யக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் பகிஷ்கரித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நாளொன்றுக்கு 3 மாணவியர் வீதம், வவுனியாவுக்கு வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி மாணவர்கள் மீது தொடர்ச்சியான பயங்களும் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான ஒரே ஒரு காரணம் அவர்கள் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை மட்டும்தான். போர்க் களத்தில் போர்க் களத்தில் போராடி வீழ்ந்த வீரர்களுக்கு உயர் மதிப்பளித்து போற்றி வழிபடுவது என்பது உலகம் முழுவதுமே புனிதமாகப் பேணப்பட்டு வரும் ஒரு மரபு.
இலங்கையின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு அந்த உரிமையைக் கூட வழங்கத் தயாரில்லை. அது மட்டுமன்றி அப்படி அஞ்சலி செலுத்துவது ஒரு பாரதூரமான குற்றமாகவே அவர்களால் கொள்ளப்படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்கப் புரட்சி செய்த ஜே.வி.பியின் மரணித்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த உரிமை உண்டெனவும் நாட்டைப் பிரிக்கப் போராடிய விடுதலைப் புலிகளை அஞ்சலிக்க அனுமதிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
முழுநாட்டையும் பிடிக்க முயன்றவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்பதும் நாட்டில் தாங்கள் வாழும் பகுதிக்கு மட்டும் விடுதலை கோரியவர்கள் பயங்கரவாதிகள் என்பதும் அவரின் வியாக்கியானம்.
ஆனால் அவர் அந்தக் கூற்றின் மூலம் சொல்லாமலே வெளிப்படுத்திய ஒரு செய்தியைத் தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர். அதாவது இந்த நாட்டில் சிங்களவருக்கு உள்ள உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை என்பதுதான் அது.
அதேவேளையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வடபகுதியின் இராணுவக் கட்டளைத் தளபதியைச் சந்தித்து தடுப்பிலுள்ள மாணவர்களை விடுவிக்கும் படி கோரியபோது அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பே விடுவிக்கப்படுவர் எனவும் அவர்களை விடுவிக்கும்படி மாணவர்கள் போராட்டம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி அவர்களை வகுப்புகளுக்குச் செல்லுமாறு ஆலோசனை சொல்லும் படி பெற்றோரிடமும் விரிவுரையாளர்களிடமும் வலியுறுத்தியிருந்ததார். இவற்றிலிருந்து இலங்கையின் ஆட்சியாளர்களும் படையினரும் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் எத்தகைய மதிப்பளிக்கிறார்கள் என்பதையும் எவ்வாறு ஒரு கொடிய அடக்குமுறையின் கீழ் தமிழ் மக்களை கையாள்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் மாவீரர் நாளையொட்டி ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கைது வேட்டை மாணவர் மட்டத்துடன் நின்றுவிடவில்லை. இது மேலும் மேலும் விரிவடைந்து சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என எல்லா மட்டத்தினர் மேலும் பாய ஆரம்பித்துள்ளது.
இதுவரை யாழ்.குடாநாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஆணைக்குழு உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜெயக்கொடி கருத்து வெளியிடும் போது இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் எனவும் அவர்கள் தலைமறைவாக இதுவரை காலமும் இருந்து வந்தவர்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இவர்களைப் பற்றிப் புலனாய்வுப் பிரிவினர் பல மாதங்களாகத் தகவல் சேகரித்ததன் அடிப்படையில் இவர்கள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களிடம் தற்சமயம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிலர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் ஏனையோர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவரின் கூற்றிலிருந்து இவர்களில் எவரும் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்ற விடயம் தெளிவாகிறது. இப்படியான ஒரு நிலையில் இங்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.
இவர்கள் தொடர்பாகப் பல மாதங்களாக புலனாய்வுப் பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டிருந்தால் ஏன் அந்தந்த நேரங்களில் அவர்கள் கைதுசெய்யப்படாமல் பல்கலைக்கழகப் பிரச்சினை இடம்பெறும்போது கைது செய்யப்படுகின்றனர்? இந்த 45 பேரும் ஏன் சுதந்திரமாக உலவ விடப்பட்டனர்? இவர்கள் தலைமறைவாக இருந்திருந்தால் ஏன் இப்போது மட்டும் வெளி வந்தனர்?
இப்படியான கேள்விகளுக்கு எவரும் பதிலளிக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் இவற்றுக்கான பதில் இல்லை. இப்படியான நிலையில் ஏதோ ஒரு உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு பல்கலைக்கழகச் சம்பவங்களைச் சாட்டாக வைத்து ஒரு பெரும் சதி வலை பின்னப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பாகப் பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டு சிக்கல்களை ஏற்படுத்தும்.
அதில் வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பதும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் இலங்கை அரசு தமிழர் தயாகப் பகுதிகளில் படைக்குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை.
சிங்களக் குடியேற்றங்களை நிறுவி விரிவுபடுத்துவது, தமிழ் மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பது, ஒரு இராணுவக் கட்டுப்பாட்டை அங்கும் நிலைநிறுத்துவது போன்ற விடயங்களைத் தொடரவும் இன ஒடுக்குமுறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவும் இங்கு பெருந்தொகையான படையினர் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
அப்படியாக இராணுவத்தினரை இங்கு தொடர்ந்து நிலை கொள்ள வைக்க ஒரு காரணம் தேவை. அந்த நோக்கத்தை நிறைவேற்றவே மீண்டும் புலிகள் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர் என்ற தோற்றப்பாடு இப்படியான கைதுகள் மூலம் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இன்னொரு புறம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை அபகரித்து இராணுவ முகாம்களை நிறுவுதல், ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் மக்களின் இயல்பு வாழ்வுக்கு குழப்பம் விளைவித்தல், ஒவ்வொரு விடயங்களிலுமான இராணுவத் தலையீடு என்பவற்றுக்கு எதிராக தங்கள் ஜனநாயக வழியிலான போராட்டங்களில் இறங்க ஆரம்பித்துவிட்டனர்.
இது சர்வதேச ரீதியில் இலங்கை அரசின் இனஒடுக்குமுறையை அம்பலப்படுத்துவதுடன் மனித உரிமைகள் பேரவையிலும் நெருக்கடிகளை உருவாக்கும்.
எனவே எந்நேரமும் எவரும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் மக்கள் அச்சப்பட்டு போராட்டங்களில் கலந்து கொள்ளாத நிலை உருவாகும் என அரசு எதிர்பார்க்கின்றது.
எனவே ஒரு புலிப்பூச்சாண்டி மாயையை உருவாக்கி அதன் அடிப்படையில் இம் என்றால் சிறைவாசம். ஏனென்றால் வனவாசம் என்ற பயங்கர நிலைமையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசு ஒரு வலிந்த அமைதித் தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறது.
அதன் மூலம் முகம் கொடுக்க வேண்டிய தேசிய, சர்வதேசிய நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும் என்ற அரசின் நம்பிக்கை நிச்சயம் தோல்வியடையும் என்பதே வரலாற்று அனுபவமாகும்.
மதுபானக்கடைகளின் அதிகரிப்பினாலேயே யாழ். மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.எம்.ஜிவ்ரி தெரிவித்தார். மேலும்...
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு, புதிய முதல்வராக அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்...
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் செயலர் மேலும்...
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விசேட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், சுமார் 18,000 இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவர் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. மேலும்...
யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம். மேலும்...
வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். மேலும்...
யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது. மேலும்...
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மேலும்...
சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது. மேலும்...
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன பயணத்தை மேற்கொண்டு அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி பல் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார். மேலும்...
அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த மேலும்...
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும்...